லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கி லீக்ஸ் என்ற செய்தி நிறுவனம் மூலம் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அசாஞ்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், அவர் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார். 7 ஆண்டுகளாக அவர் அங்கு தங்கியிருந்த நிலையில், அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை ஈக்வடார் நாடு திரும்பப்பெற்றது. இதையடுத்து, லண்டன் போலீஸார் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்து, லண்டன் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என ஸ்காட்லாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.