உலகம்

அதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்

அதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்

webteam

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் தொலைக்காட்சி நிருபர் ஜிம் அகோஸ்டாவின் ஊடக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு சக ஊடகவியலாளர்களும், பத்திரிகை நிருபர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டாக்கும், ட்ரம்புக்கும் இடையே பெரிய வாக்குவாதமே நடைபெற்றது. அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வெற்றிப் பெற்றது. இதனால் அதிபர் ட்ரம்ப் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தேர்தல் முடிவு குறித்து விளக்கம் அளிப்பதற்காக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை கூட்டத்தை ட்ரம்ப் கூட்டினார். அப்போது சிஎன்என் நிருபர் ஜிம் அகஸ்டா எழுப்பிய கேள்விகளால், ஆத்திரமடைந்த ட்ரம்ப், அவரிடம் இருந்த மைக்கை பிடுங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கான அவரது ஊடக அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. அதிபர் ட்ரம்பின் உத்தரவின் பேரில் மைக்கை பிடுங்க வந்த பெண் அதிகாரியிடம் ஆக்ரோஷமாக அவர் நடந்து கொண்டதால், அகஸ்டா மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், காணொளியில் அவர் மிகுந்த மரியாதையுடனேயே அந்தப் பெண் அதிகாரியிடம் நடந்து கொண்டது தெள்ளத் தெளிவாக பதிவாகியிருந்தது. இதைத் தொடர்ந்து அகஸ்டாவின் ஊடக அங்கீகார அட்டை ரத்து செய்யப்பட்டதற்கு சக ஊடகவியலாளர்களும், பத்திரிகை நிருபர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.