புதிய Air Force One விமானத்தில் பறக்கப்போகும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆக இருக்கிறார் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் விமானத்தின் குறியீட்டுப் பெயர் Air Force One. ஹாலிவுட் முதல் கேபிள் செய்திகள் வரை, Air Force One என அழைக்கப்படும் தற்போதைய விமானம், அமெரிக்க அதிபரின் பெரும்பாலான பயணங்களில் அடிக்கடி தோன்றும்போது பிரபலமாகியுள்ளது.
அமெரிக்க 'ஆதிக்கம்', அதன் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மிக முக்கியமான அடையாளம் இது. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான இந்த விமானம், சிறப்பான வடிவமைப்பையும் கட்டமைப்பையும் கொண்டது. அதிபர் மட்டுமே இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
1953-ம் ஆண்டு அதிபராக இருந்த ஐஸனாவர் சென்ற விமானத்தின் வழித்தடத்தில் லாக்ஹீட் நிறுவனத்தின் விமானம் ஒன்று பறந்து வந்ததால், விபத்து ஏற்படும் நிலை உருவானது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபரின் விமானம் மட்டும் Air Force One என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து பல வகையான விமானங்கள் அமெரிக்க அதிபரை ஏற்றிச் செல்லும் Air Force One சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 1990-ல் இருந்து போயிங் விசி 25 ஏ என்ற வகையைச் சேர்ந்த இரு விமானங்கள் அதிபர்களின் பயணத்துக்காகப் பயன்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, `பறக்கும் வெள்ளை மாளிகை' எனப்படும் தற்போதைய Air Force One விமானம் புதிய வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இருக்கும் 747s விமானத்திற்கு பதிலாக புதிதாக போயிங் 747-8i விமானம் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த 747s விமானம் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஐந்து அதிபர்களை சுமந்து சேவை செய்த பின்னர் தற்போது மாற்றப்பட இருக்கின்றன. வி.சி-25 பி என பெயரிடப்பட்ட இந்தப் புதிய ஜெட் அடுத்த தலைமுறை விமானம். முன்பு இருந்த Air Force One விமானங்களை விட பெரியது. எனினும் முந்தைய விமானங்களை விட விலை அதிகமாக இருந்தாலும், ஒப்பிடும்போது சில முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
5 பில்லியனுக்கும் அதிகம்!
இந்தத் திட்டத்திற்கு 5.3 பில்லியன் டாலர் செலவாகும் என்று டிஃபென்ஸ்ஒன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் இது அனைத்தும் யூகங்கள்தான். டிஃபென்ஸ்ஒன், போயிங் ஜெட் விமானங்களின் சரியான விலையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. ட்ரம்ப் அதிபராக இருந்தேபோதே இந்தத் திட்டம் குறித்து பேசப்பட்டது. அப்போது ட்ரம்ப் இந்த திட்டத்தின் தொகையை 4.4 பில்லியன் டாலரிலிருந்து 3.9 பில்லியன் டாலராகக் குறைத்தார் என்று டிஃபென்ஸ்ஒன் தெரிவித்துள்ளது.
புதிய வி.சி-25 பி விமானங்களுக்கான உரிமையாளரின் கையேட்டை போயிங் உருவாக்கும் என்று விமானப்படை ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த கையேட்டில் 100,000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கும் என்றும், ஜெட் விமானப்படைக்கு வழங்கப்படும் நேரத்தில் கையேடு தயாராக இருக்காது, 2025 ஜனவரியில்தான் கையேடு தயாராகும் என்றும் டிஃபென்ஸ்ஒன் தெரிவித்துள்ளது. இந்த புதிய விமானங்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை நீடிக்கும்.
முந்தைய விமானங்களைபோல அனைத்து சிறப்பம்சங்களை இதில் இருக்கும் என்றாலும், போயிங் 747-8i இன் சிறப்புகளில் ஒன்று ஜெனரல் எலக்ட்ரிக்கிற்கான அதன் அடுத்த தலைமுறை இயந்திரங்கள் ஆகும். மேலும், தற்போதைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் பழைய இயந்திரங்களை விட அதிக எரிபொருள் திறன் கொண்டவை. முந்தைய விமானங்களை விட அளவில் இது பெரியதாக இருக்கின்ற போதிலும் 71 பயணிகள் செல்லும் அளவுக்கே அதன் திறன் இருக்கும். அதற்கு காரணம், அதிபர் அலுவலகம், தகவல் தொடர்பு அளவுகளும், மருத்துவ தொகுப்பு அல்லது தனியார் படுக்கையறை போன்ற பயணிகள் அல்லாத இடங்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அளவு கூட்டப்பட முடியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
பைடனுக்கு கிடைக்கப்போகும் பெருமை!
இத்தனை வசதிகளுடன் தயாராகும் புதிய Air Force One விமானம், 2024 ஆம் ஆண்டில் அதிபர் மற்றும் அவரது ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதிய Air Force One விமானத்தில் பறக்க போகும் முதல் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆக இருக்கிறார் ஜோ பைடன். எனினும் தனது பதவிக் காலத்தின் முடிவில் சில மாதங்கள் மட்டுமே இந்த விமானத்தில் அவர் பயணிக்க முடியும். ஒருவேளை அவர் அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு வென்றால் இந்த புதிய விமானத்தில் நான்கு வருடங்கள் பயணித்த முதல் அதிபர் என்ற பெருமையை பெறுவார்.