தற்கொலை எண்ணத்தில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஜப்பான். அந்த வகையில் மத்திய ஜப்பானில் உள்ள அரசு அதிகாரிகள், தங்கள் நாட்டின் நீண்ட கால பிரச்னையாக இருக்கும் தற்கொலை சம்பவங்களை சமாளிக்க அசாதாரமாண புதிய அணுகுமுறையை முன்னெடுத்திருக்கிறார்கள்.
அதன்படி, டாய்லெட் பேப்பரில் மனதுக்கு தேவைப்படும் ஆதரவளிக்கும் நம்பிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகிறார்கள். தற்கொலை செய்துக்கொள்ளும் இளைஞர்களை சுலபமாக இந்த விழிப்புணர்வு சென்றடையும் என்ற எண்ணி, இந்த புது முயற்சியை அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். உலகின் பல நாடுகளை போலவே ஜப்பானில் நீண்ட கால பிரச்னையாக தற்கொலை இருப்பதோடு, கொரோனா ஊரடங்கு காலத்தின் போது தற்கொலை செய்துக்கொண்டதாலேயே அந்நாட்டில் இறப்புகள் அதிகரித்து காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக 2020ம் ஆண்டில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாலேயே 499 பேர் இறந்ததாக தரவுகளை சுட்டிக் காட்டியிருக்கிறது அந்நாட்டு சுகாதார அமைச்சகம். ஆகையாலேயே பள்ளி மாணவர்களிடையே இருக்கும் தற்கொலை எண்ணெங்களை தடுக்கும் விதமாக உறுதியளிக்கும் செய்திகள் மற்றும் தற்கொலை தடுப்பு ஹாட்லைன் எண்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது, துன்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவ ஒரு பயனுள்ள மற்றும் விவேகமான வழியாக இருக்கலாம் என்று யமனாஷியில் உள்ள அதிகாரிகள் எண்ணியிருக்கிறார்கள்.
அந்த வகையில், கடந்த மாதம் 12 பிராந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரசாரம் செய்திகள் மற்றும் தொலைபேசி எண்களுடன் அச்சிடப்பட்ட 6,000 ரோல்களை உள்ளடக்கிய டாய்லெட் பேப்பர்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.
சுருண்டு கிடக்கும் பூனை, குடை பிடித்தபடி வானத்தை நோக்கிப் பார்ப்பது போன்ற விளக்கப்படங்களுக்கு இடையில், தனிமையைப் போக்குவதற்காக மனநல நிபுணரால் உருவாக்கப்பட்ட “அன்பரே, வேறொருவருக்காக சரி என்று சொல்லி பாசாங்கு செய்து, வேதனையான நாட்களைக் கழிக்கிறீர்கள்” என்று வெள்ளைத் தாளில் நீல நிறத்தில் எழுதப்பட்ட பிரசார செய்திகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோல “எல்லாவற்றையும் எங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை... ஆனால் அதில் கொஞ்சமாவது சொல்லலாமே” என்றும் எழுதப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக AFPயிடம் பேசியுள்ள யமனாஷி அதிகாரி கெனிச்சி மியாசாவா, “நீங்கள் கழிப்பறையில் தனியாக இருக்கிறீர்கள். இதுபோன்ற தருணங்களில் நீங்கள் வேதனையின் எண்ணங்களுக்கு ஆளாக நேரிடும் என்று நாங்கள் உணர்ந்தோம்” என்று இளைஞர்களுக்காக கூறியிருக்கியிருக்கிறார்.