உலகம்

மசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்? 

மசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்? 

webteam

பாகிஸ்தான் சிறையிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மறைமுகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அறிவித்தது. இதன்பிறகு மசூத் அசாரின் சொத்துகளை முடக்கி அவரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மசூத் அசார் தற்போது சிறையிலிருந்து மறைமுகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் மசூத் அசார் தலைமையில் ராஜஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் எல்லை பகுதியில் அதிகளவில் பாகிஸ்தான் தன் நாட்டு ராணுவ வீரர்களை குவித்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக பாக். பிரதமர் இம்ரான் கான் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய எடுத்த முடிவிற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் மீண்டும் அதிகரித்துள்ளது. இச்சூழலில் பாகிஸ்தானின் இந்த முடிவு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.