உலகம்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பயன்பாடு: ஜெர்மனி, பிரான்சும் தற்காலிக நிறுத்தம்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பயன்பாடு: ஜெர்மனி, பிரான்சும் தற்காலிக நிறுத்தம்

jagadeesh

அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்துவதை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் நிறுத்திவைத்துள்ளன.

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மிகச் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்த நிலையில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன. அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்ட 7 பேருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதன் பயன்பாடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனகா மருந்தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டை 2 வாரத்திற்கு நிறுத்திவைப்பதாக ஸ்பெயின் கூறியுள்ளது. முன்னதாக ரத்தம் உறைதல் பிரச்னைக்காக டென்மார்க் உள்ளிட்ட வேறு சில ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்திவைத்திருந்தன. அஸ்ட்ராஜெனகா மருந்து பயன்பாடு குறித்து முடிவெடுக்க நாளை மறுநாள் அவசர ஆலோசனையை நடத்த ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாடு அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவர்களில் 37 பேருக்கு மட்டும் ரத்தம் உறைதல் பிரச்னை இருந்ததாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது. ஆனால் ரத்தம் உறைந்ததற்கு தங்கள் மருந்துதான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அஸ்ட்ரானஜெனகா தெரிவித்துள்ளது. 37 பேருக்கு ரத்தம் உறைதல் இருந்ததற்கும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அதைத்தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதே தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.