உலகம்

பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ்: புதிய தலைவர் அறிவிப்பு

பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ்: புதிய தலைவர் அறிவிப்பு

webteam

அமெரிக்க படையினரால், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதுபற்றி கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ’’சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க சிறப்புப்படைகள் நடத்திய தாக்குதலில் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டார். சுரங்கம் ஒன்றில் சிக்கிய அவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் ஒரு கோழை போல இறந்தார். டிஎன்ஏ பரிசோதனை மூலம், கொல்லப்பட்டது பக்தாதிதான் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார். அதோடு அவர் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடர்ப்பான வீடியோவும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பக்தாதி கொல்லப்பட்டுவிட்டதை ஐஎஸ்‌ பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது. அபு இப்ராகிம்‌ ஹாஷிமி அல் -குரேஷி என்ற அப்துல்லா குரேஷி என்பவரை புதிய தலைவராக அந்த அமைப்பு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.