உலக பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்ட மிஸ்.ஈராக்குக்கு வந்த கொலை மிரட்டலை அடுத்து அவர்கள் குடும்பம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் உலக பிரபஞ்ச அழகிப் போட்டி நடந்தது. இதில் தென்னப்பிரிக்காவின் டெமி லெ நெல் பீட்டர்ஸ் அழகியாக தேர்வானார். இதற்கான போட்டியில் ஈராக் அழகியும் மாடலுமான சாரா இடானும் கலந்துகொண்டார். இஸ்ரேல் நாட்டில் இருந்து அடார் கேண்டல்ஸ்மேன் கலந்துகொண்டார். இருவரும் போட்டி நடக்கும் இடத்தில் தோழியானார்கள். இதையடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்ட இவர்கள், அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர்.
அதில், ’மிஸ் ஈராக் மற்றும் மிஸ் இஸ்ரேலிடம் இருந்து அன்பும் அமைதியும்’ என்று கேப்சன் எழுதியிருந்தனர். நீச்சல் உடையில் தான் இருந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் ஈராக்கின் சாரா. இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொலை மிரட்டல் வந்ததை அடுத்து சாராவின் குடும்பம் அந்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இதை இஸ்ரேல் அழகியும் உறுதிபடுத்தியுள்ளார்.
‘நான் அவருடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பிரச்னை அடங்கிய பிறகு நாடு திரும்புவார்’ என்று கூறியுள்ளார் இஸ்ரேலின் கேண்டல்ஸ்மேன்.
சாரா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ’இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் முதல் பெண் அல்ல நான். மில்லியன் கணக்கிலான ஈராக் பெண்கள் இப்படி பயத்தில்தான் வாழ்ந்துவருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய பிரச்னையில் ஈரான் மக்கள் இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்த செல்ஃபி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.