உலகம்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா? : ஈரான் அரசு மறுப்பு

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா? : ஈரான் அரசு மறுப்பு

jagadeesh

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் நீடிக்கும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலை அந்நாட்டு காவல்துறை மறுத்துள்ளது.

ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டார். மேலும், சில முக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை, ஈராக்கில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.

இத்தகைய பதட்டமான சூழலில் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தை அமெரிக்க போர் விமானம் என கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். சர்வதேச நெருக்கடியை தொடர்ந்து விமானத்தை சுட்டு வீழ்த்தியது தாங்களே என கடந்த சனிக்கிழமை ஈரான் ஒப்புக் கொண்டது.

விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் அரசின் செயல் அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசைக் கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நீடிக்கிறது. இந்த சூழலில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அரசு காவல்துறையை கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என காவல்துறை கூறியுள்ளது.