இந்தோனேஷியாவில் பள்ளி மாணவர்களிடம் இருந்து, செல்ஃபோன்களை பறித்து, தீயில் இட்டு எறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிர்வாகம் விதிக்கும் நெறிமுறைகளை, அங்கு படிக்கும் மாணவர்கள் மீறும்போது, ஆசிரியர்கள் சிறியளவில் தண்டனை கொடுப்பர். ஏனெனில் எதிர்காலத்தில் தவறான செயல்களில், மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால், அந்த தண்டனைகளை பொருட்படுத்தாமல், மேலும், மேலும் விதிகளை மீறும் மாணவர்களுக்கு, கடுமையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுப்பார்கள். அந்த தண்டனைகள் கூட, அவர்களை பெரிதளவில் பாதிக்காத அளவிலேயே இருக்க வேண்டும்.
ஆனால், இந்தோனேஷியாவில் ஒரு பள்ளியில், மாணவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்ஃபோன்களை ஆசிரியர்கள் எறியும் நெருப்பில் தூக்கிப் போட்டு அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கெஞ்சல் மற்றும் அழுகையையும் மீறி, ஆசிரியர்கள், செல்ஃபோன்களை தீயில் எறித்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, அந்த ஆசிரியர்களுக்கு ஆதரவும், கண்டனமும் குவிந்து வருகின்றன.
மாணவர்களிடமிருந்து செல்ஃபோன்களை பறித்து, ஒரு வாரம் கழித்து திருப்பி கொடுத்திருக்கலாம் என்றும், அந்த செல்ஃபோன்களை அவர்களுக்கு அழிக்க உரிமையில்லை என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். செல்ஃபோன்களை அழித்த ஆசிரியர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் மாணவர்கள், மீண்டும் செல்ஃபோன்களை பள்ளிக்குக் கொண்டு வருவதை நிறுத்துவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.