உலகம்

“முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்” - மியான்மரில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

“முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்” - மியான்மரில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

Veeramani

மியான்மரில் அனைத்து இந்திய குடிமக்களும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மியான்மர் பதட்டம் தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “மியான்மரில் சமீபத்திய நில்வரங்களை கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களால், யாங்கோன்-புது தில்லிக்கு இடையே பிப்ரவரி 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் இப்போது பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்று யாங்கோன் இந்திய தூதரகம் தெரிவித்தது.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராணுவத்தின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபர் வின் மைன்ட், ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் மியான்மர் ராணுவத்தின் தலைமைத் தளபதி மின் ஆங் லேங் உள்ளார்.