சூடான் போர் செய்தியாளர் / ரகுமான்
உலகம்

சூடான் போர்: பாதுகாப்பின்றி தவிக்கும் இந்தியர்கள்... வேண்டுகோள் விடுத்த வெளியுறவுத்துறை!

சூடான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வாழும் இந்தியர்கள் செல்ல இடமில்லாமல் திக்கற்றிருக்கும் நிலையிலும், இந்திய தூதரகத்திற்கு யாரும் வரவேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

PT WEB

சூடான் நாட்டில் நிலவும் போர் பதற்றத்தால் அங்கு வாழும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறி வருகிறார்கள். நகரில் எங்கும் குண்டு மழை மற்றும் எப்போதும் கேட்கும் துபாக்கிச்சூடு சத்தம் போன்றவற்றால் நிலை குலைந்து நிற்கும் இந்தியர்கள், உணவு, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துவருகிறார்கள். இந்நிலையில் அங்கு சிக்கிக்கொண்டுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் உதவிக்கரம் நீட்டவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் நிலவிவரும் உள்நாட்டு போர்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில், ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறிவருகிறார்கள். அந்நாட்டின் உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர்.

சூடான் போர்

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கும், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை வாங்கிக்கொள்ளவும், அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

சூடான் போர்

ஆனால் போர் நிறுத்தம் செய்யப்பட்டதையும் மீறி, இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உம்துர்மன் பகுதியில், துணை ராணுவப்படையினர் வெடிகுண்டு, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றார்கள். இதனால் தமிழர்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள், உயிரை கையில் பிடித்தபடி நித்தம் நித்தம் அங்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

தமிழக அரசானது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முதற்கட்டமாக கால அவகாசம் கொடுத்து போர் நிறுத்தத்தை கொண்டுவந்து, அங்குள்ளவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.

குடி தண்ணீர், உணவு இல்லாமல் தவித்து வரும் தமிழர்கள்!

இவர்களில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த அப்துல் முஹம்மது என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு சூடானில் வசித்து வருகின்றார். ஆடை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த ஒருவாரமாக நிறுவனத்தை மூடிவிட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். வீட்டில் மின்சாரம் இல்லை, குடிதண்ணீர் இல்லை, உணவு கிடைக்காமல் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது

சூடான் போர்

உள்நாட்டு போர் நடப்பதால் துணை ராணுவப்படையினர் சூப்பர் மார்க்கெட், உணவு விடுதிகள், அத்தியாவசிப்பொருட்களின் கிடங்குகள், வங்கிகளில் கூட துப்பாக்கிச்சூடு நடத்தி சூறையாடப்பட்டு வருவது மக்களை அச்சப்பட வைத்துள்ளது.

‘என் சகோதரர் மட்டுமல்லாம் அனைவரையும் மீட்க வேண்டும்!’- சிக்கியுள்ள இந்தியரின் சகோதரர்

இவரது நிலையை அறிந்த கூத்தாநல்லூரில் உள்ள இவரது வயதான தாயார் மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மான் ஆகியோரது குடும்பம் மிகவும் துயரத்தில் உள்ளார்கள்.

அப்துல் ரஹ்மான், சூடானில் சிக்கிய இந்தியரின் சகோதரர்

சகோதரர் அப்துல் முஹம்மது படும் துன்பத்தை நினைத்து ரமலான் பண்டிகை கொண்டாடும் மனநிலையில் கூட இல்லை என தெரிவிக்கும் அப்துல் ரஹ்மான், தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் பேசி தனது சகோதரர் மட்டுமல்ல அங்கு சிக்கியுள்ள அனைத்து இந்தியரையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய தூதரகத்தால் கூட உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

அப்துல் ரஹ்மான் நம்மிடையே பேசுகையில், “இரு நாடுகளுக்கான பிரச்னை என்றால் கூட ஏதாவது ஒரு நாட்டுடன் பேசி முடிவெடுக்கலாம்... உள்நாட்டு போர் என்பதால் அந்நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்தால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது என்று சொல்கிறார்கள். இதனால் அவர்கள் கொடுக்க விரும்பும் உதவியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கர்தூம், ஹமாரத் ஆகிய பகுதிகளில் உள்ள இந்தியர்கள் ஆபத்தான இடத்தில் இருகின்றனர்” என தெரிவிக்கிறார்.

பாதுகாப்பு கருதி யாரும் இந்திய தூதரகம் வரவேண்டாம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியர்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பு சூழல் இல்லாத நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் திறந்தும், செயல்பட்டுக்கொண்டும் தான் இருக்கிறது. சண்டை நடைபெறும் இடத்தில் இருக்கிறது என்பதால், இந்தியர்கள் யாரும் தற்போது தூதரகம் வர முயற்சிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர்

மேலும் ‘சூடான் நிலவரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்பது தான் அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக கருதப்படுகிறது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சில திட்டங்கள் இருக்கிறது. ஆனால் அங்கு நிலவும் அசாதரண சூழலால், அதனை செயல்படுத்த சில சிக்கல்கள் இருந்துவருகிறது’ என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.