அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்திய அரசு அதிகப்படியான மானியம் தருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது அந்நாட்டின் விவசாய வர்த்தகத்துறை பிரதிநிதி GREGORY DOUD இதைத் தெரிவித்தார். இந்தியாவின் விளைபொருள் மானியக் கொள்கை குறித்து அரிசி மற்றும் கோதுமையை அதிகளவில் விளைவிக்கும் நாடுகள் கவலைகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த நாடுகளையும் விட இந்தியாதான் அதிகளவில் அரிசி, கோதுமை உற்பத்தி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் விளைபொருள் மானியக் கொள்கையால் சர்வதேச வர்த்தகச் சமநிலை பாதிக்கப்படும் என்றும் அமெரிக்க பிரதிநிதி தெரிவித்தார். விவசாய விளைபொருட்களுக்கு இந்தியா அதிக மானியம் வழங்குவது குறித்து WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனமும் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் அதிக மானியம் காரணமாக அவற்றை உலக சந்தைகளுக்கு குறைந்த விலையில் இந்தியா ஏற்றுமதி செய்ய முடிகிறது. இது பிற அரிசி, கோதுமை ஏற்றுமதி நாடுகளை பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.