உலகம்

இலங்கையில் கைதான ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிப்பு

இலங்கையில் கைதான ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிப்பு

webteam

இலங்கையில் கைது செய்யப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

டெல்லியில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன ஃபோட்டோகிராபராக பணியாற்றுபவர் சித்திக் அகமது டேனிஷ். இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு அங்கு தற்காலிக பணிக்காக சித்திக் அனுப்பப்பட்டார். கொழும்பு அருகே நெகோம்போ நகரில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றுக்குள் அனுமதியின்றி நுழைய முயன்றதாக சித்திக்கை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். 

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சித்திக், 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செயின்ட் செபாஸ்டியன் தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்த மாணவர் குறித்து பள்ளியில் தகவல் சேகரிக்க முன்அனுமதியின்றி பள்ளிக்குள் நுழைந்ததாக சித்திக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பத்திரிகையாளர் டேனிஷிற்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு உத்தரவாத ஜாமின் வழங்கியுள்ளது. அத்துடன் அவர் மீண்டும் வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நெகாம்போ நகரிலுள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 93 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.