உலகம்

”கால்களில் தோட்டாக்களின் துண்டுகள்” - இம்ரான்கானை பரிசோதித்த டாக்டர் சொல்வதென்ன?

”கால்களில் தோட்டாக்களின் துண்டுகள்” - இம்ரான்கானை பரிசோதித்த டாக்டர் சொல்வதென்ன?

Abinaya

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தனது பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், விரைவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி, பாகிஸ்தான் முழுவதும் பேரணி நடத்தி வந்தார். இந்த பேரணியில் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கானுடன் சேர்த்து அவரது கட்சினர் நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டத்தாக கூறப்பட்டது. மேலும் இம்ரான் கானின் காலில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

இந்நிலையில், இம்ரான் கானின் கட்சியினர் தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, இம்ரான்கான் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர்அசாம் தனது 'ட்விட்டர் பக்கத்தில் இம்ரான்கான் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அல்லாவே, பாகிஸ்தானை பாதுகாக்க வேண்டும்' என பதிவு செய்துள்ளார். இதேபோல முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது 'ட்விட்டர் பக்கத்தில்,’ இந்த சமயத்தில் ஒரு நாடாக நாம் ஒன்று பட வேண்டும். நமது தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்க கூடாது' என தெரிவித்துள்ளார்.

இம்ரான் உடல்நிலை - டாக்டர்கள் சொல்வதென்ன?

இம்ரான் கானின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக பிரதமரின் உடல்நலம் தொடர்பான முன்னாள் உதவியாளர் டாக்டர் பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார். மேலும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன்களின் படி, அவரது கால்களில் தோட்டாக்களின் துண்டுகள் உள்ளன மற்றும் ஒரு சிப் உள்ளது. இதனால் ஆபரேஷன் தியேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்," என தெரிவித்து உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்ரான்கானின் முன்னாள் மனைவி கூறியது என்ன?

இம்ரான் கானின், முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித், தனது அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.  "இந்த செய்தியை கேட்டவுடன் ரொம்ப பயந்தோம். கடவுளுக்கு நன்றி அவர் நலமாக இருக்கிறார். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சமாளித்த கூட்டத்தில் இருந்த வீரனுக்கு நன்றி" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் ஷெரீஃப் கண்டனம்

தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ளார். அத்துடன் உடனடியாக இது தொடர்பாக புலன் விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டார். இது மோசமான படுகொலை முயற்சி என்று ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி தெரிவித்தார்.

எதற்காக பேரணி நடந்தது?

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ஊழல், முறைகேடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கலைக்க வேண்டும். உடனடியாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் தற்போது பாகிஸ்தானின் பல இடங்களில் தொடர்ந்து இம்ரான் கான் கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.