உலகம்

சுறாக்கள் ஏரியாவில் சிக்கிய கப்பல் மாலுமி... 17 மணி நேர போராட்டத்தின் முடிவு என்ன?

சுறாக்கள் ஏரியாவில் சிக்கிய கப்பல் மாலுமி... 17 மணி நேர போராட்டத்தின் முடிவு என்ன?

JananiGovindhan

ட்ரெக்கிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் போன்ற அட்வென்ட்சர் பயணங்களில் ஈடுபடும் வழக்கம் உலகில் பலரிடையே தற்போது பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. அதுவும் சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து வாழ்வில் ஒரு முறையாவது இப்படியான பயணங்களை மேற்கொண்டு விட வேண்டும் என்ற எண்ணத்திலும் இருப்பார்கள்.

அப்படி உறுதியாக இருந்து சாகச பயணங்களுக்கு சென்றாலும் எதிர்பாராத விதமாக மலைகளிலோ, கடலிலோ சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் கேரளவில் மலப்புரத்தின் செராட் மலைக்கு பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம் ட்ரெக்கிங் சென்றபோது அதில் ஒரு வாலிபர் மலை இடுக்கில் சிக்கி 48 மணிநேரத்திற்கு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி இருக்கையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாலுமி ஒருவர் பனாமாவில் உள்ள நடுக்கடலில் சிக்கி, அதன்பின் 17 மணிநேர நீண்ட நெடிய நீச்சலுக்கு பிறகு கரையை அடைந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஜான் டீர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உலகை சுற்றி வருவதாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

இப்படி இருக்கையில் கடந்த ஜூன் 8 அன்று மத்திய அமெரிக்காவின் தெற்கே அமைந்துள்ள பனாமா அருகே தனது படகில் ஜான் சென்றுக் கொண்டிருக்கையில் தவறுதலாக நடுக்கடலில் விழுந்திருக்கிறார். அதுவும் சுறா மீன்கள் உலாவும் பகுதியில். அவர் வந்த படகோ ஆட்டோ பைலட் மோடில் சென்றிருக்கிறது.

ஷார்க் புள்ளியில் சிக்கிய ஜான் டீர் கட்டாயம் கரையை அடைந்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால் அந்த கடலில் விழுந்த நேரமோ அந்திசாயும் 5 மணி. கரையோ 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் இருக்கிறது. அதாவது 17 கிலோமீட்டர். உயிரை காக்கும் லைஃப் ஜாக்கெட்டும் அவர் வசம் இருந்திருக்கவில்லை.

இருப்பினும் எப்பாடுப்பட்டாவது கரை சேர்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு நீந்த தொடங்கியிருக்கிறார். அவ்வாறு நீந்தும்போது அவரது காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த ஜான், சுறாவாக இருக்குமோ என்ற பீதியில் அதனிடம் இருந்து தப்பிக்க நாலாப்புறமும் சுற்றி, நீந்தி, கத்தி உதைத்திருக்கிறாராம். ஆனால் அது மீன்கள்தான் என டெய்லி மெயில் ஆஸ்திரேலியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சோர்வாக இருந்தாலும் நீந்துவதை விட்டிடாமல் தொடர்ச்சியாக நீந்திய ஜானை, அவரது முன் கை அளவுக்கு இருந்த மீன்கள் அவரது கால்களை கடித்திருக்கின்றனவாம். இதனால் ஏற்பட்ட கால் மற்றும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஜான் டெய்லி மெயிலிடம் தெரிவித்துள்ளார். மேலும், நிலத்தில் இருந்து தான் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம் என்பதை அறிய படகோட்ட தந்திரத்தையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

அதாவது, ”நான் என் கையை வெளியே பிடித்தேன், நிலம் முதலில் என் கையை முழுமையாக மூடியது. ஒரு மணி நேரம் கழித்து நான் நினைத்ததை மீண்டும் சோதித்தேன், என் கையின் இருபுறமும் மலையின் ஒரு பகுதியைக் காண முடிந்தது.”  "அடுத்த முறை நான் சரிபார்த்தபோது என் கையின் இருபுறமும் சுமார் 30 சதவிகித நிலத்தைப் பார்த்தேன், என்னால் இதைச் செய்ய முடியும், என்னால் இதைச் செய்ய முடியும் என்று நினைக்க ஆரம்பித்தேன்." எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ஒருவழியாக மாலுமி ஜான், பாறைகள் உள்ள பகுதியை அடைந்து அங்கு சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் தன் நீச்சலை முடுக்கிவிட்டு கரைக்கு வந்தடைந்திருக்கிறார். ஆனால் மீட்புக் குழுவினர் வரும் வரையில் ஜான் கரையிலேயே காத்திருந்தார். பின்னர் மீட்கப்பட்டதும் ஜான் டீரின் படகை பனாமா போலீசார் கண்டுபிடித்தனர்.

நடுக்கடலில் சிக்கி 17 மணிநேர தொடர் நீச்சலுக்கு பிறகு மீட்கப்பட்ட ஜான் டீர் தற்போது ஆஸ்திரேலியா சென்று தனது குடும்பத்தினர், நண்பர்களை சந்திக்க விழைந்ததால் பாஸ்போர்ட்டை பெற அதிகாரிகளை நாடியுள்ளாராம். மேலும், தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டும், பேண்ட் மட்டும்தான் மிச்சமிருக்கிறது எனக் கூறியுள்ள ஜான் டீர், 2019ல் தொடங்கிய தனது மாலுமி பயணத்தை மீண்டும் தொடரவுள்ளதாகவும் உறுதியோடு Thumbsup செய்து கூறியுள்ளார்.

ALSO READ: