நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் புகை வெளிவந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் கதே டிராகன் நிறுவனத்துக்கு சொந்தமான kA451 விமானம் ஒன்று தைவானில் உள்ள கோசியுங் (Kaohsiung) என்ற நகரில் இருந்து ஹாங்காங்குக்கு இன்று காலை 8.2 மணிக்கு புறப்பட்டது. சென்று கொண்டிருந்தது. விமானத்தில் 317 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் வலது என்ஜினில் புகை வருவதைக் கண்டுபிடித்தார் விமானி.
இதையடுத்து உடனடியாக விமானி, கோசியுங் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பரபரப்பான விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தரையிறங் குமாறு அறிவுறுத்தினர். பின்னர் தைவான் நீரிணையில் விமானத்தில் இருந்த எரிபொருளை கொட்டிவிட்டு, தேவையான எரிபொருளுடன் விமான நிலையத்துக்கு அந்த விமானம் திரும்பி, பத்திரமாக தரையிறங்கியது. அங்கு தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் பறவை மோதியதால் என்ஜினில் புகை வெளியாகி இருக்கும் என கூறப்படுகிறது. பிறகு பயணிகள் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.