உலகம்

5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி!

5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி!

webteam

தனது ஐந்து வயதில் பைக் பரிசளித்தவரை, 24 வருடத்துக்குப் பின் தேடிக் கண்டுபிடித்திருக்கும் இளம் பெண், ட்விட்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசித்து வரும் 29 வயது பெண் மேவன் பாபங்கர். இவர் வளைகுடா போர் ஆரம்பித்தபோது, ஈரானில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி நெதர்லாந்து அகதிகள் முகாமில் இருந்தார். அப்போது அவருக்கு 5 வயது. அந்த நேரத்தில் அங்கு பணியாற்றிய ஒருவர், அவருக்கு சிறிய பைக் ஒன்றைப் பரிசளித்தார். காலம் வேகவேகமாக மாறி, இப்போது லண்டனில் வசிக்கிறார் மேவன். 

இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், ’’தனக்கு பைக் பரிசளித்த இந்த நபர், நான் அகதியாக இருந்த இடத்தில் அருகில் வசித்து வந்தார். இவர் பெயர் தெரிய வேண்டும். இவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? உதவுங்கள்’’ என்று ட்வீட் செய்திருந்தார். அவ்வளவுதான், ’இந்தாங்க அவர்’ என்று ஒரே நாளில் தேடிக் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது, ட்விட்டர் உலகம். அவரை நேரில் சந்தித்த மேவன், அவருடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்து, கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

’’அவர் எக்பர்ட். அவரும் அவர் மனைவியும் என் குடும்பத்துக்கு அப்போது அதிகமாக உதவியுள்ளனர். நான் தைரியமான வலிமையான பெண்ணாக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. அவருக்கு அழகான குடும்பம் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ள அவர், இவ்வளவு விரைவாக அவரை கண்டுபிடிக்க உதவிய ட்விட்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.