ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும், தாங்கள் விலகப் போவதில்லை என சீனாவும், ஜெர்மனியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஈரானுடன் செய்துக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் மோசமானது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் விலகினார். இந்நிலையில் அரசுமுறை பயணமாக பெய்ஜிங் சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஈரான் விவகாரம் குறித்து சீன பிரதமர் லீ கெக்கியாங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதில்லை என தெரிவித்தனர். முன்னதாக இந்த விவகாரம் குறித்து, அறிக்கை வெளியிட்ட ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இன்றும் மதிப்பதாகவும், ஒருவேளை அந்த ஒப்பந்தத்தில் இருந்து பிற நாடுகளும் விலகினால், நிறுத்தப்பட்ட யூரேனியம் செறிவூட்டும் பணிகளை மீண்டும் தொடங்கி விடுவோம் என்றும் எச்சரித்தார்.