உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்று ஜி20 மாநாட்டின் கூட்டறிக்கை தெரிவித்துள்ளது.
ஜி-20 மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில், “உலகப் பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கவிருக்கிறது. நாம் அனைவரும் அவரவர்களின் சந்தைகளை திறந்து வைத்து நியாயமான, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு சூழலை உருவாக்க பாடுபடவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, “ ஜி-20 நாடுகள் அனைத்து சில ஒற்றுமைகள் கொண்டுள்ளன. எனவே அனைவரும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். ஜி-20 நாடுகள் சுதந்திர வர்த்தக முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன” என்று தெரிவித்தார்.
மேலும் இம்மாநாடு குறித்து ரஷ்யா அதிபர் புதின், “இந்த மாநாட்டில் பெரிய அளவிலான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. எனினும் அனைவரும் உலகப் பொருளாதாரத்தை உயர்த்த ஒன்றிணைந்து பாடுபட உழைக்கப்போவதாக தெரிவித்துள்ளன. அத்துடன் உலகப் பொருளாதார மையத்தில் சில சீர்திருத்தங்களை செய்ய அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டள்ளன” எனக் கூறினார்.
இந்த மாநாட்டில் அமெரிக்கா மற்றும் சீனா மீண்டும் பொருளாதாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. எனினும் இந்த மாநாட்டில் ஒரு சில நாடுகள் வர்த்தகத்தில் விதிக்கும் வரிகள் குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. ஏற்கெனவே கடந்த வருடம் அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டிலும் இதுகுறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஏனென்றால், அமெரிக்கா சில ஜி-20 நாடுகள் மீது பொருளாதார ரீதியான வரிகளை விதித்து வருகிறது. எனினும் இதுகுறித்து ஆலோசிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.