உலகம்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இலங்கையை விட்டு வெளியேற தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இலங்கையை விட்டு வெளியேற தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜா. ஜாக்சன் சிங்

இலங்கையில் நடைபெறும் மக்கள் போராட்டத்தால் அதிபர் கோட்டாபய ராஜபட்ச நாட்டை விட்டு தப்பியோடி விட்ட நிலையில், அவரது இரு சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவை நாட்டில் இருந்து வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக தொடரும் இந்த மக்கள் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, பொருளாதாரத்தை சீரமைக்க புதிய அரசுக்கு அவகாம் வழங்கும் வகையில் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் நிறுத்தி வைத்தனர். ஆனால், பொருளாதார நிலை சீரமைக்கப்படாததால் கொதித்தெழுந்த மக்கள், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தலைநகர் கொழும்புவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதிபரின் மாளிகையும் சூறையாடப்பட்டது. இதையடுத்து, உயிருக்கு பயந்து கோட்டாபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பியோடினார். அதன் பிறகு தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடியே, தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், இடைக்கால அதிபராக ரணில் விக்ரசிங்கவை நியமித்தார். அதன்படி, ரணில் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். இதற்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை ராணுவ முகாமில் தஞ்சமடைந்திருக்கும் அதிபரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மகிந்த ராஜபக்சேவையும், பசில் ராஜபக்சேவையும் நாட்டை விட்டு வெளியேற தடைவிதித்து உத்தரவிட்டது.