சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தியே வருகிறது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் தங்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறியுள்ளன. இப்படியாக கொரோனாவால் 4 மாதங்களுக்கு மேலாக தன்னில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட ஒரு நாடு சிங்கப்பூர்.
இந்தியாவிற்கு பிறகே ஊரடங்கை கையில் எடுத்தது சிங்கப்பூர். சிறிய நாடு என்றாலும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு இறங்கியது. அந்நாட்டு அரசுக்கு ஒரு முக்கிய கடமை இருந்தது. அது வெளிநாட்டு பணியாளர்களை காப்பது. சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிகம். குறிப்பாக சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம். பாதுகாப்பு, சம்பளம் என சிங்கப்பூரை நாடிய தமிழக இளைஞர்கள் அதிகம். அப்படி நம்பி வந்த பணியாளர்களை கொரோனாவில் இருந்து இமை போல சிங்கப்பூர் அரசு காத்து வருவது மறுக்க முடியாத உண்மை. கொரோனா ஊரடங்கு அறிவிப்பின் போது சமூக வலைதளத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்,
"வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள் இந்த சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் நலனில் நாங்கள் அக்கறை கொள்கிறோம். ஒருவேளை நான் பேசுவதை வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் குடும்பத்தினர் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கணவரோ, உங்கள் மகனோ, உங்கள் அப்பாவோ இங்கு இருந்தால், அவர்களை நாங்கள் பத்திரமாகவே திரும்ப அனுப்புவோம். மேலும் இந்த நிலைமை மாற இந்த கடினமான காலங்களைக் கடந்து செல்ல வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார். அவர் பேசியது போலவே 4 மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பான கவனிப்பை கொடுத்து வருகிறது லீ சியன் லூங் அரசு. இது தொடர்பாக சிங்கப்பூரில் உள்ள தமிழர் ஒருவரிடம் பேசினோம் அவர் குறிப்பிட்ட தகவலின்படி,
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டு பணியாளர்கள் ஹாஸ்டலில் தான் உள்ளனர். பாதுகாப்பு காரணமாக ஹாஸ்டலில் சமூக இடைவெளியுடன் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஹாஸ்டல் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதால் உயர் தர ஹோட்டல்களில் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அறைக்கு ஒருவர். பெரிய அறையாக இருந்தால் ஒரு அறைக்கு இருவர் என்ற கணக்கில் தங்கியுள்ளனர். கிட்டத்தட்ட குவாரண்டைன் (தனிமைப்படுத்தல்) மாதிரிதான். மூன்று வேளையும் சத்தான உணவு இடத்திற்கே வந்துவிடுகிறது. அதுபோக பழங்கள், ஸ்நாக்ஸ் வகைகளும் இடம் தேடி வந்துவிடுகின்றன. வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடன் பேச வேண்டுமென்றால் தேவை இணையம் தான்.
சிங்கப்பூர் அரசு மாதத்திற்கு 50ஜிபி இணையத்தை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது. சில இடங்களில் வைஃபை மூலம் இலவச இண்டர்நெட் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பலருக்கு இரண்டு முறையும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் மட்டுமே பணியாளர்கள் ஹாஸ்டலுக்கோ, உயர் தர ஹோட்டலுக்கோ அழைத்துச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக வேலை இல்லை என்றாலும் ஆரம்ப சம்பளத்தை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன. சிங்கப்பூர் அரசு அதனை உறுதி செய்கிறது. வெளிநாட்டு பணியாளர்கள் தானே என்று இல்லாமல் எங்களை எல்லாம் இமை போல சிங்கப்பூர் காப்பதாக நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நம்ம ஊர் இளைஞர்கள்.
சிங்கப்பூர் பிரதமர் நேரலையில் கூறியது போல வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள் தான் சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்திலும், நிறுவனத்திலும், சாலையிலும் வெளிநாட்டு பணியாளர்களுன் உழைப்பு உள்ளது. அப்படிப்பட்ட பணியாளர்களை கடினமான சூழல் ஒன்றில் சிறப்பாக கவனித்து வருகிறது சிங்கப்பூர். கொரோனா நேரத்தில் தேர்தல் நடைபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து தன் சிறப்பான ஆட்சியைத் தொடரும் லீ சியன் லூங்கிற்கு வெளிநாட்டு பணியாளர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். தற்போது குறைவான ஊழியர்களுடன் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சிங்கப்பூர் தன் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்பதே அங்கு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.