உலகம்

முப்பது நாட்கள் தங்கியே ஆகவேண்டும்- சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து நடவடிக்கை

முப்பது நாட்கள் தங்கியே ஆகவேண்டும்- சுற்றுலாவை மேம்படுத்த தாய்லாந்து நடவடிக்கை

webteam

உலகம் சுற்றும் வாலிபர்களுக்கு உடனே நினைவில் வருவது தாய்லாந்து நாடுதான். அங்குதான் சுற்றுலாப் பயணிகளை இருகரம் கூப்பி உற்சாகம்பொங்க வரவேற்கிறார்கள். சுற்றுலாத் துறையால் அந்த நாடு பொருளாதாரத்தில் செழித்து வளர்ந்திருக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள் சுற்றுலாத் துறையை முடக்கி வைத்துவிட்டன.

மெல்ல பழைய நிலைக்குத் திரும்பிவரும் தாய்லாந்து, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு அக்டோபர் மாதம் முதல் வரும் பயணிகள் முப்பது நாட்கள் கண்டிப்பாக தங்கவேண்டும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் முதல்கட்டமாக அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தபட்சம் முப்பது நாட்கள் தங்கியிருக்கவேண்டும் என்று தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் கவர்னர் யுதாசக் சுபாஷோர்ன் தெரிவித்துள்ளார். அதில் தனிமைப்படுத்திக்கொள்ளும் 14 நாட்களும் அடங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்டோபர் 1 ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்படும் காலகட்டத்தில் இரண்டு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அதற்குப் பின்னரே இஷ்டம்போல மற்ற பகுதிகளுக்குச் செல்லமுடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிப்பாட் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு வாரகாலம் அந்த குறிப்பிட்ட மாகாணத்திற்குள் தங்கியிருந்த பின்னரே தாய்லாந்து முழுவதும் ஹாயாக சுற்றிவரமுடியும்.