உலகம்

ஃபிளாரென்ஸ் புயலால் ஆயிரத்து 400 விமானங்கள் அமெரிக்காவில் ரத்து

ஃபிளாரென்ஸ் புயலால் ஆயிரத்து 400 விமானங்கள் அமெரிக்காவில் ரத்து

webteam

ஃபிளாரென்ஸ் புயல் அமெரிக்காவை தாக்கத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போய் உள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயல், விர்ஜினியா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களை தாக்க தொடங்கியுள்ளது. கனமழை பெய்து வருவதால் பெரு வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்ட ஃபிளாரென்ஸ் புயல் இன்று விர்ஜினியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினாப் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் அம்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. உயிர் சேதங்களை ஏற்படுத்தும் அளவுக்கு ஃபிளாரென்ஸ் புயலின் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டதால், விர்ஜினியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து, ஏராளமானோர் நிவாரண முகாம்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். புயல் காரணமாக வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, மேரிலேண்ட், விர்ஜினியா ஆகிய ஐந்து கடலோர மாவட்டங்களிலும், தலைநகர் வாஷிங்டனிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதில், சுமார் ஒரு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புயல் வீசத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள்ளாகவே வடக்கு கரோலினாவில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழந்தது.

இந்நிலையில் புயல் மேலும் தீவிரமடையக் கூடும் என்றும், பல்வேறு இடங்களில் அதிக அளவிலான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் எந்தவொரு நிலையையும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக சுமார் ஆயிரத்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.