elon musk pt web
உலகம்

“விக்கிபீடியாவிற்கு 1 பில்லியன் டாலர் வழங்க தயார்.. ஒரே ஒரு கண்டிஷன்” - எலான் மஸ்க்

விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் தருவதாக கூறிய எலான் மஸ்க் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Angeshwar G

தொடர்ந்து வைரல் செய்திகளில் அடிபடுபவர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தொடர்ந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அதிரடியான பல அறிவிப்புகளையும் வெளியிட்டு பயனர்களுக்கு அடிக்கடி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருபவர் எலான் மஸ்க்.

அவரது பதிவுகள் தொடர்ந்து வைரலாக வலம் வரும். உதாரணத்துக்கு மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் ஆரம்பித்த சமயத்தில் அதனையொட்டி எலான் மஸ்க் போட்ட பதிவுகள் அனைத்தும் வைரலானது.

இந்நிலையில் தற்போது விக்கிபீடியவை வம்பிற்கு இழுத்துள்ளார். விக்கிபீடியா தனது பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விக்கிபீடியா தனது பெயரை டிக்கிபீடியாவாக மாற்றிக்கொண்டால் அவர்களுக்கு 1 பில்லியன் டாலர் தருகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ட்விட்டர் பயனர் ஒருவர் விக்கிப்பீடியாவை குறிப்பிட்டு “இப்போது மாற்றிக்கொள்ளுங்கள், பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் பெயரை மாற்றிக்கொள்ளலாம்” என கூறினார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “குறைந்தபட்சம் ஒரு வருடம் இருக்க வேண்டும். நான் ஒன்றும் முட்டாள் அல்ல” என பதிவிட்டுள்ளார்.

பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் என்ற எலான் மஸ்க்கின் பதிவு 12.7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அப்பதிவிற்கு ஏறத்தாழ 1.29 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.