உலகம்

ஒன்டிக்கு ஒன்டிக்கு வர்றியா? ரஷ்ய அதிபர் புடினை சண்டைக்கு அழைத்த தொழிலதிபர்

ஒன்டிக்கு ஒன்டிக்கு வர்றியா? ரஷ்ய அதிபர் புடினை சண்டைக்கு அழைத்த தொழிலதிபர்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேருக்கு நேர் சண்டைக்கு அழைத்திருக்கிறார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரி எலான் மஸ்க்.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்த ரஷ்ய ராணுவம், மூன்று வாரங்களுக்கும் மேலாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் ராணுவத்தினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதற்காக ரஷ்யாவுக்கும், அதன் அதிபர் விளாடிமிர் புடினுக்கும் பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே போல, ஏராளமான நாடுகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கும் ஒருவர். உக்ரைன் மீது படையெடுத்தது முதலாகவே, ரஷ்யாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், உக்ரைனுக்கும் பல்வேறு தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் அவரது நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில், எலான் மஸ்க் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், "விளாடிமிர் புடினுக்கு சவால் விடுக்கிறேன். என்னுடன் ஒற்றை ஆளாக நேருக்கு நேர் மோத தயாரா? உங்கள் கரடியையும் துணைக்கு அழைத்து வரலாம்" என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க்கின் இந்த ட்வீட், சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆகியுள்ள போதிலும், புடின் இதுகுறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுக் குழுத் தலைவரான டிமிட்ரி ரோகோசின் எலான் மஸ்க்குக்கு பதிலளித்துள்ளார். பிரபல ரஷ்ய கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கினின் ஒரு கவிதை வரியை, புடின் கூறுவது போல அவர் பதிவிட்டுள்ளார். அதில், "என்னுடன் மோதுவதற்கு உனக்கு தகுதி இல்லை. அது நேர விரயமும் கூட. முதலில் எனது தம்பியுடன் சண்டையிட்டு ஜெயிக்க முடியுமா என பார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தன்னுடன் முதலில் சண்டைக்கு வருமாறு எலான் மஸ்க்கை டிமிட்ரி ரோகோசின் அழைத்திருக்கிறார்.