சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை கொல்ல அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ராணுவ நாய் ஒன்று காயமடைந்தது. அதன் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பக்தாதியை, பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் அவர் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அப்பகுதியில் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பக்தாதியைத் தேடும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் திறமை மிக்க நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இருள் நிறைந்த சுரங்கத்தில் மறைந்திருந்த பக்தாதியை ராணுவ நாய் கண்டுபிடித்தபோது, பக்தாதி தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததால் நாயும் படுகாயமடைந்தது. காயமடைந்த நாயின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பக்தாதி கொல்லப்பட்டதில் திறமையான இந்த நாயின் பணி அளப்பறியது என பதிவிட்டுள்ளார்.