உலகம்

’’ஐஎஸ் தலைவர் பக்தாதி, கோழை போல தற்கொலை செய்துகொண்டார்”: டிரம்ப்

’’ஐஎஸ் தலைவர் பக்தாதி, கோழை போல தற்கொலை செய்துகொண்டார்”: டிரம்ப்

webteam

’ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்- பக்தாதி ஒரு கோழை போல இறந்தார்’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி. இந்த அமைப்புக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை இந்த அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது. அப்போது, இஸ்லாமிய தேசம் உருவாகிவிட்டதாக அல் பக்தாதி பேசும் வீடியோ வெளியானது. அதன்பின் தலைமறைவானார். அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகளின் தாக்குதலில் தங்கள் வசம் இருந்த பகுதிகளை, ஐஎஸ் அமைப்பு இழந்தது. இருந்தாலும் தலைமறைவாக இருந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் இலங்கையிலும் இந்த அமைப்பினர் தற்கொலை தாக்குதல்களை நடத்தினர்.

இந்நிலையில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அல்-பக்தாதி, 5 வருடங்களுக்குப் பிறகு, வீடியோவில் தோன்றி பேசினார். 18 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், இலங்கையில் எதற்காக குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கப் படைகள், சிரியாவில் அவரை ரகசியமாகத் தேடிவந்தன. அவர் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்த அமெரிக்கப் படைகள் அவரைக் கொன்றுவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.

இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். அவர் அறிவிக்கும்போது, ’’சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் அமெரிக்க சிறப்புப்படைகள் நடத்திய தாக்குதலில் அபு பக்கர் அல்-பக்தாதியும் கொல்லப்பட்டார். சுரங்கம் ஒன்றில் சிக்கிய அவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரு கோழை போல இறந்தார். அவருடன் அவரது 3 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். டிஎன்ஏ பரிசோதனை மூலம், கொல்லப்பட்டது பக்தாதிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அதோடு, ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக், குர்து படைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதை அறிவிக்கும் முன்பாக, ’ஏதோ மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளது’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.