உலகம்

மீட்கப்பட்டது ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு.. ”இது கடவுளின் குரல்” என எலான் மஸ்க் ட்வீட்!

மீட்கப்பட்டது ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு.. ”இது கடவுளின் குரல்” என எலான் மஸ்க் ட்வீட்!

JananiGovindhan

முடக்கப்பட்டிருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்குக்கான தடையை நீக்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலரும், வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்கள். இதனால் கோடிக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியிருந்தது.

இதுபோக, ஃபேஸ்புக், யூடியூப் தளங்களில் இருந்த ட்ரம்ப்பின் கணக்கும் முடக்கப்பட்டன. இதனையடுத்து ட்ரம்ப் Truth என்ற புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதிலும் அவருக்கு எக்கச்சக்கமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்கே ட்விட்டரில் வாக்கெடுப்பை ஏற்படுத்தியிருந்தார். அதில், ஆம் என்பதற்கு 51.8 சதவிகிதத்தினர், இல்லையென 48.2 சதவிகிதத்தினர் என 1 கோடியே 50 லட்சத்து 85,458 பேர் வாக்களித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, “மக்களே பேசிவிட்டார்கள். ட்ரம்ப்பின் கணக்கு மீட்டெடுக்கப்படும். மக்களின் குரலே கடவுளின் குரல் (Vox Populi, Vox Dei)” என லத்தீன் மொழியில் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, ட்ரம்புக்கு தற்போது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் சேர்ந்திருக்கிறார்கள்.