பெரும் பணக்காரர்களுக்கு ஸ்டார் ஓட்டல்களுக்கு சென்று தங்குவது, நேரத்தை கழிப்பதெல்லாம் கைவந்த கலையாகத்தான் இருக்கும். ஆனால் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்டார் ஓட்டல்களில் தங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கக் கூடும். அவற்றை நிஜத்தில் நடத்திக்காட்டவே அவர்களுக்கு பல காலம் எடுக்கும்.
ஆனால் தற்போது நாம் பார்க்கப்போகும் சொகுசு ஓட்டலில் ஒரு நாளைக்கு இலவசமாக தங்கி பார்ட்டியே நடத்தலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில்தான் வாடிக்கையாளர்களுக்கான ஒரு அறிவிப்பையும் கொடுத்து அதில் ஒரு செக்கும் வைத்திருக்கிறது.
அது என்னவென்றால், ஒரு நாளைக்கு தங்களது ஓட்டலில் இலவசமாக தங்கிக்கொள்ள வேண்டுமென்றால் முக்கியமான கண்டிஷனுக்கு தலையசைக்க வேண்டும் என கூறியிருக்கிறது.
அப்படி என்ன அந்த கண்டிஷன் என்றால், வழக்கமான ஸ்டார் ஓட்டல்களில் இருப்பது போன்று, எங்கள் ஓட்டலில் இந்த பிரத்யேக சேவைக்கு பிரைவசி எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில், இங்கு பிரைவசியே இருக்காது. ஓட்டலின் லாபி இருக்கும் தளத்தில்தான் இலவசமாக தங்கும் அறை உள்ளது.
அது முழுக்க முழுக்க சுவர்களற்ற கண்ணாடிகளால் ஆன அறையாகும். அதாவது, உள்ளே அறையில் இருப்பது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது அனைத்தும் வெளியில் இருப்பவர்களால் பார்க்க முடியும். அறைக்குள் இருக்கும் உங்களாலும் வெளியே யார் வர போக செய்கிறார்கள் என்பதை காண முடியும். கழிவறைக்கு மட்டும் கதவிடப்பட்டிருக்கும் எனக் கூறியிருக்கிறது.
மேலும் அந்த அறைக்கு Zero Suite என்றும் பெயரிடப்பட்டிருக்கிறதாம். ஸ்பெயினின் பலேரிக் என்ற தீவுப்பகுதியில் அமைந்திருக்கும் paradiso ibiza art என்ற ஓட்டல் நிர்வாகம்தான் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
2018ம் ஆண்டுதான் இந்த ஜீரோ சூட் ரூமை ஓட்டல் நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது. இபிஸாவின் இந்த ஆஃபர் பலரை கவர்ந்திருக்கிறது என்பதை அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள ஃபோட்டோக்கள் மூலம் அறிய முடிகிறது. கண்ணாடிகளால் ஆன இந்த அறையில் டபுள்காட் பெட், டிவி, டேபிள், சேர் என அனைத்து தேவையான வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக யூடியூபர் ட்வைன் மஃபின் தன்னுடைய அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அதில், “இபிஸாவின் ஜீரோ சூட் அறையால் எனக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அத்தனை மோசமானதாக நான் கருதவில்லை” எனக் கூறியிருக்கிறார்.