சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா உலகம் முழுக்க ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத்தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்றும் ஊரடங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகளவில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன.
காய்ச்சல், சளி, வறட்டு இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை கொரோனா அறிகுறிகளாக இருந்தாலும் நுகரும் மற்றும் ருசி அறியும் தன்மையை இழப்பதுதான் கொரோனா தொற்றிற்கான நம்பகமான அறிகுறி என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
லண்டனில் வெளியாகும் பிளாஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. திடீரென நுகரும் மற்றும் ருசி அறியும் தன்மையை இழந்தததாக கூறியவர்களில் 78% பேருக்கு தொற்று இருந்ததாக அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இவர்களில் 40% பேருக்கு காய்ச்சலோ இருமலோ இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதில் இந்த ஆய்வுத் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் RACHEL BATTERHAM தெரிவித்துள்ளார்.
வாசனை, ருசி தெரியாவிட்டால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் ஆய்வின் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். பல நாடுகள் காய்ச்சல் மற்றும் இருமலையே கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளாக கருதுவதாகவும் ஆனால் வாசனை, ருசி அறியும் தன்மையை இழப்பதையே பிரதான அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.