உலகம்

சௌதியா? தென்னாப்பிரிக்காவா? குழம்பிய ரொனால்டோ... ட்ரோல் செய்து தள்ளிய கால்பந்து ரசிகர்கள்!

சௌதியா? தென்னாப்பிரிக்காவா? குழம்பிய ரொனால்டோ... ட்ரோல் செய்து தள்ளிய கால்பந்து ரசிகர்கள்!

சங்கீதா

பிரபல கால்பந்து ஜம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சம்பவம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், கால்பந்து ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தார் நாட்டில் சமீபத்தில் நடந்த முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர், போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அதேபோல், இந்தத் தொடருக்கு முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி குறித்தும், உரிமையாளர்கள் குறித்தும் ரோனால்டோ பேசிய கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ விலக உள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் முடித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சௌதி அரேபியாவின் அல் நசர் (Al Nassar) என்ற கிளப் அணிக்கு விளையாட கிறியஸ்டியானோ ரொனால்டோ மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதாவது, வரும் 2025-ம் ஆண்டு வரை சுமார் இரண்டரை ஆண்டு காலத்திற்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ள அல் நசர் அணி, விளம்பர ஒப்பந்தங்களையும் சேர்த்து ஆண்டுக்கு சுமார் 1,775 கோடி ரூபாயை ஊதியமாக தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சொல்லப்போனால் இதன்மூலம் உலக கால்பந்து ஜாம்பவன்களில் அதிக ஊதியம் பெறும் வீரராக ரொனால்டோ முதல் இடம்பிடித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அல் நசர் அணியில் ரொனால்டோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் விழா, சௌதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக் கழக அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே, அல் நசர் அணியின் ஜெர்சியை அணிந்தபடி கிறிஸ்டியானோ ரொனால்டோ தோன்றினார்.

அரங்கமே வண்ணமயமாக காட்சியளித்தநிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, கிறியஸ்டியானோ ரொனால்டோ தவறுதலாக பேசிய ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது அவர் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரையில், தென்னாப்பிரிக்காவுக்கு (சௌதி அரேபியாவை குறிப்பிட நினைத்து) வருவது என்பது, எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவல்ல. இந்த எண்ணத்தை தான், நான் மாற்ற விரும்புகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், மக்கள் என்ன பேசுகிறார்கள்ள் என்பதை நான் பொருட்படுத்துவதில்லை. நான் உறுதியான முடிவை எடுத்துள்ளேன். நான் இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

தற்போது இதனைத்தான் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சௌதி அரேபியா அணியா இல்லை, தென்னாப்பிரிக்கா அணியா என்று அவரே குழம்பிவிட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இவரையா இவ்வளவு தொகைக்கு அல் நசர் கிளப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில், அவரது ரசிகர்கள் தவறுதலாக அவர் கூறிவிட்டதாக ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரொனால்டோ பேசும்போது, “நான் ஒரு தனித்துவமான வீரர். இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐரோப்பாவில் மிக முக்கியமான முன்னணி அணிகளுடன் விளையாடிவிட்டேன். அங்கு அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டேன். ஆசியாவில் புதிய சவால்கள் காத்திருக்கின்றன. மேலும் சில சாதனைகளை இங்கு முறியடிக்க விரும்புகிறேன்.

வெற்றி பெறுவதற்காகவும், விளையாடுவதற்காகவும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கவும் இங்கு வந்திருக்கிறேன். ஐரோப்பா, பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்தும், எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன என்பது யாருக்கும் தெரியாது. பல அணிகள் என்னை ஒப்பந்தம் செய்ய முயன்றன. ஆனால் இந்த அணிக்காக விளையாடுவதாக வாக்களித்துவிட்டேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் ஆகிய முன்னணி கிளப் அணிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவரான ரொனால்டோ, ஆசிய நாட்டைச் சேர்ந்த கிளப் அணியில் சேர்ந்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.