உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்புகள், பல நாடுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்துவரும் நிலையில், இந்தத் தொற்றுப்பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக அளவில் கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இதன் தாக்கம் கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. இருந்தாலும், இப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது உருமாறிய கொரோனா வைரஸ்.
பிரிட்டனில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிவேகமாகப் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் மீண்டும் ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டன. மரபியல் மாற்றமடைந்த இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பிரிட்டனிலிருந்து வரும் விமானம் மற்றும் கப்பல்களுக்குத் தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்தன. பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர டிசம்பர் 31ம் தேதி வரை தடை விதித்திருக்கிறது.
ஸ்விட்சர்லாந்தில் உருமாறிய கொரோனா வைரஸால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரும் கடந்த வாரம் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள். பிரான்சில் கிறிஸ்துமஸ் அன்று ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் லண்டனிலிருந்து பிரான்ஸ் திரும்பியவர். அதேபோல, இங்கிலாந்திலிருந்து திரும்பிய 4 பேரில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது ஸ்பெனில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு ஸ்பெயின் தடை விதித்துள்ளது,
ஸ்வீடனில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக டென்மார்க் மற்றும் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு அனுமதி ரத்து செய்யபட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தனிமைபடுத்தபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் ஜப்பானில் 7 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. சிங்கப்பூரில் ஒருவருக்கும், கனடாவில் இருவருக்கும் 2 பேருக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் 70% வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமும், கொரோனா தடுப்பூசி மூலமும் இதனை எதிர்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியா, தமிழகத்தில்...
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 17 பேரில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யபட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ``பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்ததவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புகள் குறைவு" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: உருமாறிய கொரோனா வைரஸ்: இந்தியாவில் இதுவரையிலான நடவடிக்கைகள் என்னென்ன?