சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன கோடீஸ்வரருமான ஜாக் மா, கடந்த ஜூன் 29ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு ஒருநாள் தங்கியும் இருந்திருக்கிறார் எனும் செய்தி தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த தகவலை பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் முஹம்மது அஸ்பர் அஹ்சன் உறுதிபடுத்தியுள்ளார்.
அதன்படி ஜாக் மா கடந்த ஜூன் 29 அன்று லாகூர் வந்து 23 மணி நேரம் தங்கியதாகவும், அவர் வருகையின் நோக்கம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் அதேவேளையில் வரும் நாட்களில் இது பாகிஸ்தானுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அஹ்சன் நம்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கினறன.
ஜாக் மாவின் வருகை நிச்சயமாக தனிப்பட்ட நோக்கங்களுக்காக என்று தெளிவுபடுத்திய அஹ்சன், சீனத் தூதரகத்திற்கு கூட ஜாக் மாவின் வருகை குறித்த செய்தி தெரியாது என ட்வீட் செய்திருக்கிறார். ஜாக் மாவின் வருகையின்போது, அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பை தவிர்த்து விட்டதாகவும், அவர் ஒரு தனியார் இடத்தில் தங்கியதாகவும், ஜெட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான VP-CMA என்ற தனியார் ஜெட் மூலம் ஜூன் 30 அன்று புறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
5 சீனர்கள், ஒரு டென்மார்க் நாட்டு குடிமகன் மற்றும் ஒரு அமெரிக்கர் ஆகியோர் அடங்கிய 7 தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஜாக் மா உடன் சென்றிருக்கிறது. அவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாங்காங்கின் வணிக விமானப் பிரிவில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்ததாக தெரிகிறது.
சில வாரங்களாகவே ஜாக் மா மற்றும் அவரது குழுவினர், பாகிஸ்தானில் வணிகம் செய்ய வாய்ப்புகளை ஆராய்வதாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அவ்வாறு அவர் வரும்போது முக்கிய தொழிலதிபர்களையும், உயர் அதிகாரிகளையும் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்த சந்திப்பில், எந்தவொரு குறிப்பிட்ட வணிக ஒப்பந்தமும் செய்யப்பட்டதாகவோ அல்லது சந்திப்பு நடந்ததாகவோ தெரியவில்லை என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று கூறுகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் மென்பொருள் துறை சங்கத்தின் தலைவர் ஜோஹைப் கான், ''இது ஜாக் மாவின் தனிப்பட்ட வருகையாக இருந்தாலும், சுற்றுலா கண்ணோட்டத்தில் பாகிஸ்தானின் நற்பெயரை அதிகரிக்க உதவியது. பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்'' என்றார்.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், அந்நாட்டுக்கு ஜாக் மா வந்து சென்றிப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டிருக்கிறது. ஜாக் மாவின் பாகிஸ்தான் வருகையை பொருளாதார வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.