உலகம்

மீம்ஸ், கிண்டல், கேலி... - அமெரிக்க வன்முறையை 'கொண்டாடிய' சீனா!

மீம்ஸ், கிண்டல், கேலி... - அமெரிக்க வன்முறையை 'கொண்டாடிய' சீனா!

webteam

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை சீனா மீம்ஸ், கிண்டல், கேலிகளுடன் கொண்டாட்ட மனநிலையில் அணுகியிருக்கிறது.

ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியால் தொடங்கிய வன்முறை அமெரிக்காவையே பற்றி எரிய வைத்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவில் ட்ரம்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு, பைடனுக்கு எதிராக குரல் எழுப்பியதுடன், வெள்ளை மாளிகையில் புகுந்து சூறையாடினர்.

போலீசாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதுவரை 4 பேர் பலி என்கிறது அந்நாட்டு ஊடகம். இரு அவையின் கூட்டுக் கூட்டம் நிறுத்தப்பட்டது. முக்கியத் தலைவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் இன்றைய நாளை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க வன்முறைக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நேரத்தில், அமெரிக்க கலவரத்தை சீனா கிண்டல் செய்து வருகிறது. 2019 ஆம் ஆண்டின் ஹாங்காங் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் அமெரிக்க வன்முறையை ஒப்பிட்டு மீம்ஸ், கேலி, கிண்டல் என ஒட்டுமொத்த சீன இணையதளமும் ஆர்ப்பரித்து வருகிறது.

குறிப்பாக, சீன கம்யூனிச அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' தனது ட்விட்டர் பக்கத்தில், வாஷிங்டன் கலவரங்களுடன் ஹாங்காங் எதிர்ப்பாளர்களின் புகைப்படத்தை ஒப்பிட்டு, ``ஸ்பீக்கர் பெலோசி ஒருமுறை ஹாங்காங் கலவரத்தை 'பார்ப்பதற்கு ஒரு அழகான பார்வை' என்று குறிப்பிட்டார்' 'என்று கூறி மீம் வெளியிட்டுள்ளது.

இதேபோல், சீனாவின் கம்யூனிஸ்ட் இளைஞர் கழகமும் வெய்போ பக்கத்தில் அமெரிக்க வன்முறையை ஓர் "அழகான பார்வை" என்று கூறியுள்ளது. மேலும், ``Trump supporters storm US Capitol" என்ற ஹேஷ்டேக் வெய்போ முழுவதும் 230 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. பெரும்பாலும் அவர்கள் அமெரிக்க வன்முறையை ஹாங்காங் கலவரங்களை ஒட்டியே கேலி செய்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா குறித்து மோசமான வகையில் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவும், சீனாவும் சமீபகாலங்களாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ட்ரம்ப் சீனாவை எதிரியாகவே பாவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ - பைடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதும், அதிகார மாற்றத்துக்கு ட்ரம்ப் ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.