சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல்பகுதியில் உள்ள யாங்சிங் (Yongxing) தீவில் சீனா, சினிமா தியேட்டர் ஒன்றைத் திறந்துள்ளது.
சன்ஷா யின்லாங் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள அந்த தியேட்டரில் ‘தி எட்டர்னிட்டி ஆஃப் ஜியோ யுலு’ (The Eternity of Jiao Yulu) எனும் திரைப்படத்தை 200-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல் பகுதிகளை முழுவதும் சொந்தம் கொண்டாடிவரும் சீனா, அந்த பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சன்ஷா என்று அந்த தீவுக்குப் பெயரிட்டு புதிய நகராட்சியை நிறுவியுள்ள சீனா, அந்தப் பகுதியில் சமீபத்தில் நூலகம் ஒன்றைத் திறந்தது. இவைதவிர, பல்வேறு நகரக் கட்டமைப்புகளையும் அந்த தீவில் சீனா உருவாக்கி வருகிறது. ஆனால், அந்தப் பகுதியில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தொடர்ந்து கூறிவருகின்றன. தென்சீனக் கடல் பகுதி விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா, அப்பகுதியில் போர்க்கப்பல்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.