ஐ.நா. பொருளாதார தடையை தொடர்ந்து, வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை சீனா குறைத்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், உலக நாடுகள் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த-3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரு வருடத்தில் 12 ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி உள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே, வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒட்டுமொத்த தடை விதிக்க வேண்டும், பிற நாடுகளுக்கு வடகொரியா ஜவுளி ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும், வடகொரிய தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய உலகளாவிய தடை விதிக்க வேண்டும், வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னின் சொத்துகளை முடக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார தடைகளுக்கு வழிவகுக்கும் வரைவு தீர்மானத்தை சமீபத்தில் அமெரிக்கா ஐ.நா.வில் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் சில திருத்தங்களுடன் ஒருமனதாக நிறைவேறியது.
ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், வடகொரியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தின் அளவை குறைத்துள்ளதாக சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஜவுளி பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியும், அதிக அளவு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.