உலகம்

'2028-ல் அமெரிக்காவை முந்தும் சீனா; 2030-ல் இந்தியா 3-வது மிகப் பெரிய பொருளாதார நாடு!'

'2028-ல் அமெரிக்காவை முந்தும் சீனா; 2030-ல் இந்தியா 3-வது மிகப் பெரிய பொருளாதார நாடு!'

JustinDurai

2028-ல் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் செயல்படும் பொருளாதார ஆய்வு அமைப்பான Centre for Economics and Business Research (CBER), தனது வருடாந்திர ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் இடத்தை அடுத்த 8 வருடத்தில் சீனா பிடித்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரு பெரும் பொருளாதாரங்கள் மீண்டு வருவதில் இருக்கும் கால வேறுபாட்டால், இதற்கு முன் கணித்திருந்ததைவிட, சீனா ஐந்து ஆண்டுகள் முன் கூட்டியே உலகின் பெரிய பொருளாதாரமாக உருவாகப் போகிறது எனவும் சி.இ.பி.ஆர் அமைப்பு கூறியிருக்கிறது.

2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026 - 2030 வரை சராசரியாக 4.5 சதவீதமாக இருக்கலாம் என்கிறது சி.இ.பி.ஆர்.

டாலர் மதிப்பில் பார்க்கும் போது ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து 2030-ம் ஆண்டு வரை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் எனவும், அதற்குப் பிறகு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. அப்படி இந்தியா 2030-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இடம் பிடித்தால், ஜப்பான் நான்காவது இடத்தையும், ஜெர்மனி ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும்.

சி.இ.பி.ஆர் கணக்குப்படி, பிரிட்டன் தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டில் பிரிட்டன் பொருளாதாரம் ஆறாவது இடத்துக்குப் போகலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறது.