ஜிம்பாப்வேயில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்துக்குப் பின்னணியில் சீனா இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே ராணுவத் தளபதி சிவேங்கா, அங்கிருந்து திரும்பிய சில நாள்களில் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருக்கிறார். இதனால் ராபர்ட் முகாபேவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு சீனா மறைமுகமாக ஒத்துழைப்பு அளித்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றது.
1970களில் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் முகாபே ஈடுபட்டிருந்தபோது, சீனா அவருக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது. அவர் நாட்டின் தலைவராகப் பொறுப்புக்கு வந்த பிறகும், அவருக்கு உதவி செய்து வந்தது. இருப்பினும் தற்போதைய அரசியல் குழப்பத்தில், சீனாவுக்கு எந்த அளவுக்கு தொடர்பு இருக்கிறது என்பதுகுறித்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.