எந்த காலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், காதல் என்றால் எல்லோரும் மயங்கித்தான் போவர்! ஆனால் சில காதல் கதைகள் மட்டும், அந்த உறவில் இருப்போருக்கு மட்டுமன்றி கேட்போருக்கு கொஞ்சம் அசௌகரியத்தை கொடுக்கும். அப்படியான ஒருவர்தான் ஆர்தர் ஓ.உர்சோ என்ற பிரேசிலிய நபர்.
பிரேசிலை சேர்ந்த மாடலான உர்சோ, 9 திருமணங்கள் செய்தார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் இணையத்தில் பயங்கர வைரலாக பகிரப்பட்டு வந்திருக்கிறது. அதுவும் தனது முதல் மனைவியின் முன்னணியில் வைத்து எட்டு பேரை கரம்பிடித்திருந்தார் உர்சோ. தற்போது அவர் தனது 9 மனைவிகளில் நான்கு பேரை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து, உலகம் முழுவதும் நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். தனது இந்த விவாகரத்து முடிவுக்கு அவர் சொல்லியிருக்கும் காரணம், `எல்லோரிடமும் சீரான உறவை தொடரமுடியவில்லை’ என்பதாம்!
தனது இத்திருமணங்களின் மூலம் `தனக்கு தானே இணை’ என சொல்லும் மோனோகேமி முறைக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், `நிபந்தனையற்ற காதலை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என்றும் கூறினார் உர்சோ. திருமணம் முடித்த கையோடு, பேட்டிக்கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டிருந்த உர்சோவை, அவரது 9 மனைவிகளில் ஒருவர் தானாகவே விட்டுச்சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து மேலும் 4 பேர் தற்போது அவரிடம் விவாகரத்து கேட்டிருக்கிறார்கள். இந்நிலையில்தான் விவாகரத்து குறித்து பேசியுள்ளார் உர்சோ.
உர்சோவை முதலில் பிரிந்து சென்றது, அகதா என்ற பெண். அகதா, உர்சோவை தனக்கான கணவராக மட்டும் இருக்கசொன்னதாகவும், அது தன்னால் இயலாதென்று கூறி, அகதாவின் இந்த எண்ணம் பிற மனைவிகளுடனான தன் உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக ஊடகங்களிடம் கூறினார் உர்சோ. அதனாலேயே அகதாவை மட்டும் அவர் விவாகரத்து பெற போவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மொத்தம் 5 பேரை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இதுபற்றி அவர் பேசுகையில், “நான் இப்போது விவாகரத்து பற்றி பேசுவதற்கு காரணம், சமூக அழுத்தம் தான். நான் இன்னும் வருங் காலத்தில் பல திருமணங்கள் செய்துகொள்ளவே ஆசைப்படுகிறேன். என் வாழ்வில் ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. ஆனால் என் வாழ்வில் இன்னும் பல பெண்கள் வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன்” என்றுள்ளார்.
உர்சோ வாழும் பிரேசில் நாட்டில், பலரை ஒருவர் திருமணம் பாலிகாமி என்ற நடைமுறை தடைசெய்யப்பட்ட விஷயமாகும். அப்படியிருந்தும் அவர் பல திருமணங்கள் செய்துள்ளார். இதன் பின்னணியில் அவர் முதல் மனைவி லுனாவுக்கு சட்ட ரீதியாக அவர்மீது உரிமையில்லை என்பதே காரணம் என சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த முதல் மனைவியே, இவருக்கு திருமணம் செய்து வைத்தார் என சொல்லப்படுகிறது. லுனாவுடன் சேர்த்து 9 பேரை திருமண உறவுக்குள் இணைத்த உர்சோ, ஐந்துபேரை பிரிவது தற்போது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இவ்வளவு மனைவி வைத்திருக்கிறாரே... இவருக்கு எப்படி சம்பளம் கிடைக்கிறது என சிலர் கேள்வி எழுப்பினர். ஆங்கில ஊடகங்களில் காணக்கிடைக்கும் தகவல்களின்படி உர்சோவுக்கு அவரது ஒன்லிஃபேன்ஸ் என்ற சமூகவலைதளம் மூலம் மட்டும், ஒவ்வொரு மாதமும் 50,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம்) கிடைக்கிறதாம். இவர் இன்ஸ்டாவிலும் சில நேரம் ஆக்டிவாக இருந்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்ஸ்டாவில் முழுக்க முழுக்க தன் மனைவிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் ஃபோட்டோக்களுமே போட்டுள்ள உர்சோ, அவ்வபோது பாலியல் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் கொடுத்திருக்கிறார். இப்படி பல விமர்சனங்களுக்கு பெயர்போன உர்சோ, தற்போது மீண்டுமொருமுறை இணையவாசிகளின் டார்கெட் ஆகியிருக்கிறார்.