உலகம்

கண்ணாமூச்சி ஆட கண்டெயினருக்குள் புகுந்த வங்கதேச சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

கண்ணாமூச்சி ஆட கண்டெயினருக்குள் புகுந்த வங்கதேச சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

JananiGovindhan

குழந்தைகளெல்லாம் ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருந்தாலும் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது இருக்கும். விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் பெரியவர்கள் மிக மிக கவனமாக இருப்பர். இந்த கவனம் குறிப்பாக கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள் மீது மிக அதிகமாகவே இருக்கும்.

இதுபோன்ற காரணங்களினால், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே விளையாடும்படி குழந்தைகளை பெரியோர்கள் பணிப்பது வாடிக்கை. ஆனால் என்னதான் கண்கொத்தி பாம்பாக கவனித்து வந்தாலும், சமயங்களில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போகவும் செய்வார்கள். அந்த மாதிரியான சம்பவம் ஒன்றுதான் வங்க தேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்திருக்கிறது.

அதன்படி, நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த ஃபஹிம் என்ற சிறுவன் 2,300 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மலேசியாவுக்கு சென்று சேர்ந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் நடந்துள்ளது.

வங்க தேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங் பகுதியில் கடந்த ஜனவரி 11ம் தேதி சிறுவன் ஃபஹிம் கண்ணாமூச்சி விளையாடிய போது அங்கிருந்த கண்டெயினருக்குள் சென்று ஒளிந்துக் கொண்டிருந்திருக்கிறார். விளையாட்டாக கண்டெயினருக்குள் ஒளியச் சென்ற ஃபஹிம் அங்கேயே தூங்கியிருக்கிறான். வணிகப் பொருட்களை அந்த கண்டெயினரோ மலேசியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனை அறிந்திருக்காத சிறுவன் ஃபஹிம் அந்த கண்டெயினருக்குள்ளேயே சிக்கியிருக்கிறான்.

கிட்டத்தட்ட 6 நாட்களாக கண்டெயினருக்குள்ளேயே இருந்ததால் கடுமையான பசியில் வாடியதோடு சிறுவனுக்கு நீரிழப்பு, காய்ச்சல் என அவதிப்பட்டிருக்கிறான். கண்டெயினர் மலேசியா சென்றதும், அதற்குள் இருந்த சிறுவனை கண்டு அதிர்ச்சியுற்ற பணியாளர்கள் ஹார்பர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க விசாரித்திருக்கிறார்கள்.

அப்போதுதான் நடந்த விவரம் தெரிய வந்திருக்கிறது. முன்னதாக குழந்தை கடத்தலில் ஒருவேளை இந்த சிறுவன் வந்திருப்பானோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு இருந்திருக்கிறது. பின்னர் சிறுவனை மீட்ட மலேசிய காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சையும் வழங்கியிருக்கிறார்கள்.

இது குறித்து பேசியிருக்கும் மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன், “விளையாட்டாக கண்டெயினருக்குள் புகுந்த சிறுவன் ஃபஹிம், அங்கேயே தூங்கியதால் இங்கு வந்தடைந்திருக்கிறான்” எனக் கூறியிருக்கிறார். சிறுவன் ஃபஹிமை கண்டெயினரில் இருந்து வெளியேற்றும் வீடியோ ரெடிட் தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.