உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தற்கொலை படை பயங்கரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் சுமார் 3 பேர் உயரிழந்துள்ளதாகவும், பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ள அங்கு இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
“பேட்மிண்டன் ஹாலுக்கு புறப்பட்டு செல்ல எங்கள் பேருந்து தயாராக இருந்தது. முதலாவதாக ஒரு குண்டு வெடித்த சத்தத்தை நாங்கள் கேட்டோம். உடனடியாக தெருக்களில் மக்கள் அங்கும் இங்குமாக அலறியடித்துக் கொண்டு ஓடியதை எங்கள் கண் முன்னர் பார்த்தோம். அதன் பிறகு தான் எங்களுக்கு தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது தெரிந்தது. உடனடியாக நாங்கள் அனைவரும் ஹோட்டல் அறைகளுக்கு திரும்பினோம். ஆரம்பத்தில் வீரர்கள் தாக்குதல் குறித்து அச்சப்பட்டிருந்தனர். எங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அச்சம் போனது. தற்போது இந்த தொடரை முடித்துவிட்டே நாடு திரும்ப உள்ளோம்” என இந்திய அணியின் பயிற்சியாளர் கவுரவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து வெறும் 4.8 கிலோமீட்டர் தொலைவில் தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஹோட்டலில் இருந்து குண்டு வெடித்த புகை மூட்டம் தெளிவாக தெரிந்துள்ளது.
பிரமோத் பகத், மனோஜ் சர்க்கார், மானசி ஜோஷி மற்றும் சுகந்த் கதம் என இந்திய பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர்.