இலங்கையில் நன்கு வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டு பலரது உயிரை பறித்துள்ளதுள்ளனர்.
இலங்கையை உலுக்கிய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் வசதியான குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் மனிதவெடிகுண்டுகளாக செயல்பட்ட தகவல் அனைவரையும் அதிர்வடைய செய்துள்ளது. இன்சாஃப் இப்ராஹிம், இல்ஹாம் இப்ராஹிம் இருவரும் கொழும்புவின் தெமட்டகுடையை சேர்ந்த தொழிலதிபர் முகமது இப்ராஹிமின் மகன்கள்.
இலங்கைத் தொடர் குண்டு வெடிப்புகளுக்கான சதித் திட்டங்களை தங்களுடைய சொந்த வீட்டில் அவர்கள் தீட்டியதாக கூறப்படுகிறது. இவர்களின் தந்தை முகமது இப்ராஹிம் இப்பகுதியில் புகழ்பெற்ற தொழிலதிபர். இவரின் மகன்களா இத்தகைய கொடூர தாக்குதல்களை அரங்கேற்றியது என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அண்டை வீட்டார்.
இப்ராஹிமின் மூத்த மகனும், தாமிர ஆலை உரிமையாளருமான இன்சாஃப் இப்ராஹிம் 33 வயதானவர். இவர் தான் ஷாங்ரி லா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். இவரது சகோதரரான இல்ஹாம் இப்ராஹிம் மற்றொரு இடத்தில் மனிதவெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியுள்ளார். 31 வயதான இல்ஹாம் இப்ராஹிம் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் இருந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து தெமட்டகுடையில் உள்ள இப்ராஹிமின் வீட்டுக்கு அதிரடிப்படையினர் விரைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைய முற்பட்டபோது, பலத்த சத்தத்துடன் அங்கும் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. ஒரு காவல் ஆய்வாளரும் இரு காவலர்களும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்கள். வீட்டுக்குள் இருந்த இல்ஹாம் இப்ராஹிமின் கர்ப்பிணி மனைவியான பாத்திமா வெடிகுண்டை இயக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குண்டு வெடித்தபிறகு, வீட்டுக்குள் சென்று பார்த்த பாதுகாப்புப் படையினர், பாத்திமா தவிர, இரு குழந்தைகளும் இறந்து கிடப்பதைக் கண்டார்கள். 6 மகன்கள் 3 மகள்களின் தந்தையான தொழிலதிபர் முகமது இப்ராஹிமை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இப்ராஹிம் குடும்பத்தினருக்கு இப்படியொரு பின்னணி இருக்கிறதா என்று அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.