அமெரிக்க அதிபர் தேர்தலில் 3 மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் வென்றாலே பைடன் அதிபராகி விடுவார் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய் கிழமை தொடங்கிய நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இது வரை அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் 264 வாக்குகளை பெற்று ஏறக்குறைய அதிபர் பதவியை நெருங்கிவிட்டார்.
இந்நிலையில் 16 தேர்தல் சபை வாக்குகள் கொண்ட ஜார்ஜியா மாநிலத்தில் ஆரம்பத்தில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாகி மாறி அங்கும் பைடன் முன்னிலைக்கு வந்துள்ளார். இதனால் ட்ரம்ப்பிற்கு இருந்த சிறிய வாய்ப்பும் தகர்ந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ஜார்ஜியா மாநிலம் கடந்த 7 தேர்தலாக குடியரசுத் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 45 மாநிலங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஜார்ஜியா, நெவாடா, பென்சில்வேனியா, நார்த் கரோலினா, அரிசோனா ஆகிய 5 மாநில முடிவுகள் மட்டும் வெளியாக வேண்டியுள்ளது.
இதில் முன்னிலையில் உள்ள 3 மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் வென்றாலே பைடன் அதிபராகி விடுவார். அதே சமயம் பைடனுக்கு ஆதரவாக வந்துள்ள முடிவுகளை ஏற்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் ட்ரம்ப் மேற்கொள்ளும் சட்டப்போராட்டங்களையும் சமாளித்தே அரியாசனத்தில் அமர வேண்டிய சவாலையும் பைடன் இனி எதிர்கொள்ள உள்ளார்.