பிரதமர் மோடி சுற்றுப் பயணம் முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய நிலையில், வங்கதேசம் முழுவதும் பரவிய வன்முறை - கலவரங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, வங்க தேசத்துக்கு பிரதமர் மோடியை அழைத்ததற்கு, அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. பிரதமர் மோடி டெல்லி திரும்பிய பிறகும் அங்கு போராட்டங்களும் வன்முறைகளும் நீடித்து வருகின்றன.
கிழக்கு வங்கதேசத்தில் அரசு அலுவலகங்கள், இந்துக் கோயில்கள் மீதும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கிழக்கு வங்கதேசத்தில் உள்ள பிராமன்பாரியா மாவட்டத்தில் ரயில் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தர்.
ரயிலின் இஞ்சின் மற்றும் ஏறக்குறைய அனைத்து பெட்டிகளையும் நாசம் செய்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று ஹெபிசத்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு அழைப்பு விடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. தலைநகர் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்கார்கள் வாகனங்களையும் டயர்களையும் கொளுத்தினர்.
அவர்களை நோக்கி ராணுவத்தினரும் காவல்துறையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
வங்கதேசத்தில் கடந்த 3 நாட்களாக நீடிக்கும் வன்முறையில் ராணுவமும் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நிலைமை இன்னும் கட்டுக்குள் வராமல் வங்கதேசம் முழுவதும் வன்முறை பரவி உள்ளதால், ராணுவமும் காவல்துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.