உலகம்

கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட 30 பேர் பலி! - ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட 30 பேர் பலி! - ஆப்கானிஸ்தானில் பயங்கரம்

JustinDurai

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உடபட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லோகர் மாகாண தலைநகர் புல்-இ-ஆலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் இல்லம் அருகே நேற்று மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உடபட 30 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 90 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். 

குண்டுவெடிப்பை அடுத்து, கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர். இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு வெடித்த இடத்தில்  லோகர்  மாகாண சபையின் முன்னாள் தலைவர் மற்றும் லோகர் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் வீடுகள் அமைந்துள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. "புனித ரமலான் மாதத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பது  பயங்கரமான செய்தி. மாணவர்கள் உட்பட அப்பாவி பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது முழு நாட்டிற்கும் ஒரு சோகம்" என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்பு சம்பவங்களில் 305 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.