செயற்கை நுண்ணறிவு கொண்ட ஜப்பானின் ரோபோ ஒன்று முதன் முதலாக திரைப்டத்தில் நடிக்கவுள்ளது
ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகம் கடந்த 2015ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஒன்றை உருவாக்கியது. 23 வயது பெண்ணின் உருவத்தைக் கொண்டிருக்கும் அந்த ரோபோ எரிகா என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ என்பதால் மனிதர்களை அடையாளம் காணுதல், கண் சிமிட்டுதல் போன்ற செயல்களை செய்யும் இந்த ரோபோ. அழகான குரல், நேர்த்தியான அசைவுகள் என மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற எரிகா தற்போது திரைப்பட உலகில் கால்பதிக்க உள்ளது.
மனிதர்களுக்கும், ரோபோக்களுக்கும் இடையேயான டிஎன்ஏ மாற்றங்கள் தொடர்பான அறிவியல் புனைகதை கொண்ட பி என்ற திரைப்படத்தில் எரிகா நடிக்கவுள்ளது. இது 70 மில்லியன் டாலர்கள் செலவில் உருவாகவுள்ள திரைப்படம் ஆகும். இந்திய மதிப்பில் 530 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும். பல நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஜப்பானில் தொடங்கிவிட்டன. இந்நிலையில் மீதிப்படப்பிடிப்புகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் ஐரோப்பாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள படக்குழுவினர், பி படம் தான் எரிகா அறிமுகமாவுள்ள முதல் திரைப்படம்.நடிப்பிற்கான ஆரம்பக்கட்ட பயிற்சிகளை எரிகாவிற்கு அளித்து வருகிறோம். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உடல் அசைவுகள் உள்ளிட்ட நடிப்புக்கான சில பயிற்களும் எரிகாவுக்கு கொடுத்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.