ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தலிபான்களால் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தாலிபான்கள், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் அமெரிக்க படைகள் பின்வாங்குவதாக கடந்த 2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று காபூல் அருகே படப்பிடிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐவோர் ஷீரர் மற்றும் ஆப்கானிஸ்தான் திரைப்படத் தயாரிப்பாளர் ஃபைசுல்லா ஃபைஸ்பக்ஷ் ஆகியோரை தலிபான்கள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் ஆப்கானிஸ்தான் அரசிடம் முறையான அனுமதி பெற்றே அவர்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஊடக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கடந்த 40 ஆண்டுகால வரலாற்றைப் பற்றியதான ஆவணப்படம் எடுப்பதற்காக ஐவோர் ஷீரர், தலிபான் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து முன்அனுமதி பெற்று, ஒரு மாத விசாவில் ஆப்கானிஸ்தானுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள ஊடக கண்காணிப்பு அமைப்பினர், ஐவோர் ஷீரர் மற்றும் ஃபைசுல்லா ஃபைஸ்பக்ஷ் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தலிபான்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள 'பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு' (CPJ), ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மீதான அச்சறுத்தலை தலிபான்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி, அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட சில நாட்களில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஆப்கானிஸ்தானில் கைது செய்யபட்டிருப்பது சர்வதேச பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வட கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் செயல்படத் தொடங்கியது சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவ தளம்!