காஸா இஸ்ரேல் போர் புதிய தலைமுறை
உலகம்

இஸ்ரேல்-காஸா போர்: மனிதாபிமான இடைநிறுத்த தீர்மானம்.. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்த அமெரிக்கா!

இஸ்ரேலிற்கும் காஸாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

Prakash J

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடரும் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 13வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, இங்கிலாந்து

ஏராளமான வீடுகள், கட்டடங்கள் குண்டுவீச்சால் உருக்குலைந்து போய் இருக்கின்றன. இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ’இஸ்ரேலின் இருண்டநேரத்தில் உங்களுடன் உங்கள் நண்பராக நிற்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ - ரிஷி சுனக்

வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய அமெரிக்கா

இந்த நிலையில், இஸ்ரேலிற்கும் காஸாவிற்கும் இடையிலான மோதலில் மனிதாபிமான இடைநிறுத்தங்களை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் காஸாவுக்கு உதவிகளை அனுப்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், பிரேசில் இன்று (அக்.19) கொண்டுவந்த தீர்மானத்திற்கு 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை ரத்து செய்துள்ளது.

ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் 

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. இதில் ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், மொசாம்பிக், காபோன் ஆகிய 5 நாடுகள் ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. போதிய வாக்குகள் கிடைக்காததால் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 15 நாடுகளின் உறுப்பினர்கள் கொண்ட குழுவில், 9 நாடுகள் ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நிலைகுலையும் ஹமாஸ்.. முக்கிய பெண் தலைவர் ஜமீலா பலி.. இஸ்ரேல் ராணுவம் தகவல்!

உக்ரைன் போரில் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா

கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில், (தற்போதும் நடைபெற்று வருகிறது) ‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ஆனால், ரஷ்யா தன் ஒற்றை அதிகாரவாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது.

ஐ.நா. சபையும்... வீட்டோ அதிகாரமும் ஒரு பார்வை

ஐ.நா சபையில் அதிகாரம் பொருந்திய துணை அமைப்புகளில் மிகவும் முக்கியமானது, பாதுகாப்பு கவுன்சில். சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்வதுதான் இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் வேலை. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த முடிவையும் உலக நாடுகள் அனைத்தும் கட்டாயம் மதிக்க வேண்டும். இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதுதவிர 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு.

இதையும் படிக்க: IND Vs BAN: வெளியேறிய ஹர்திக் பாண்டியா.. நீண்டநாட்களுக்குப் பிறகு பந்துவீசிய விராட் கோலி!

வீட்டோ அதிகாரத்தில் ரஷ்யாவைப் பழிவாங்கிய அமெரிக்கா?

பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும். அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். அதேசமயத்தில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்த ஐந்து நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து, வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு. ஐந்து பேரில் யார் ஒருவர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலும், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்துவிடும். மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தனக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே இந்த வீட்டோ அதிகாரம். இதைத்தான் தற்போது அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, ரஷ்யா உக்ரைன் போரின் இதைப் பயன்படுத்தியதால் அமெரிக்கா தற்போது இதைப் பயன்படுத்தி ரஷ்யாவைப் பழிவாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய மூன்றும் ஒரு திசையிலும், ரஷ்யாவும் சீனாவும் இன்னொரு திசையிலும் எப்போதும் இருக்கின்றன. இதனால் பல முக்கிய விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதே கிடையாது. மேலும் இந்த வீட்டோ அதிகாரத்தை அதிகமுறை பயன்படுத்திய நாடுகளில் ரஷ்யா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இதையும் படிக்க: "இதை செய்வீங்களா?”-IND Vs PAK போட்டியில் தங்க ஐபோனை தவறவிட்ட நடிகை; கண்டுபிடித்த நபர் வைத்த கோரிக்கை