Wilhelmina Lancaster twitter pages
உலகம்

’மிசோரியின் அதிசயம்’ - 4 ஆண்டுகளாகியும் அழுகாத கன்னியாஸ்திரியின் உடல்; பார்க்க படையெடுக்கும் மக்கள்!

அமெரிக்காவில் இறந்தபோன கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவரின் உடல், 4 ஆண்டுகளாகியும் அழுகாமல் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியந்து பேசி வருகின்றனர்.

Prakash J

அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாகாணத்தில் அமைந்துள்ள சிறு நகரத்தைச் சேர்ந்தவர் வில்ஹெல்மினா லான்காஸ்டர் (Wilhelmina Lancaster). கன்னியாஸ்திரியான இவர், கடந்த 2019ஆம் ஆண்டு, மே மாதம் 29ஆம் தேதி தன்னுடைய 95வது வயதில் இயற்கை எய்தினார். இதையடுத்து, அவரது உடல் சவப்பெட்டி ஒன்றில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தேவாலயத்திற்குள் புதைப்பதற்காக, கடந்த 18ஆம் தேதி அவரது சவப்பெட்டி தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சவப்பெட்டியில் இருந்த சிறு இடைவெளி மூலம் வில்ஹெல்மினாவின் பாதம் அழுகாமல் இருப்பதைக் கவனித்துள்ளார். தவிர, அதுகுறித்து அடுத்தவர்களிடமும் விவரித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சவப்பெட்டியைத் திறந்து பார்த்த கன்னியாஸ்திரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவருடைய உடல் எந்த சிதைவுமின்றி, அதாவது அழுகாமல் அப்படியே இறந்துள்ளது. அவரது உடலில் கண் மட்டுமே சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற பாகங்கள் எல்லாம் அப்படியே இருப்பதைக் கண்டு அவர்கள் அதிசயித்துப் போயினர். இந்தச் செய்தி அப்பகுதி மக்களிடம் காட்டுத் தீயாய்ப் பரவ, அவ்விடத்தில் கூடி, அவரைப் பார்ப்பதற்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பார்வையிடும் பலரும், இதை ’மிசோரியின் அதிசயம்’ என்று அழைப்பதாகவும், அவரது உடலுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில், ‘கன்னியாஸ்திரியின் பாதத்தை மென்மையாகத் தொடுங்கள்’ என எழுதியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அவரது உடல் நாளை வரை (மே 29) பார்வைக்கு வைக்கப்படும் எனவும், பின்னர், தேவாலயத்தில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பொதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சகோதரி வில்ஹெல்மினா இறந்தபிறகு எம்பாமிங் செய்யப்படவில்லை. தவிர, அவருடைய உடல் ஒரு சாதாரண மர சவப்பெட்டியில் வைத்துத்தான் அடக்கம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளாகியும் அவரது உடல் அழுகாமல் இருப்பது ஆச்சர்யமே” என அங்குள்ள கல்லறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அழுகாத அந்த கன்னியாஸ்திரியின் உடல் குறித்து கத்தோலிக்க செய்தி நிறுவனம் ஒன்று, “கத்தோலிக்க மதத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஓர் உடல் அழுகாமல் இருந்தால், அது அழியாததாகக் கருதப்படுகிறது. அவர்கள் உயிர்த்தெழுதலுக்குச் சமமாவார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கன்சாஸ் சிட்டி-செயின்ட் மறைமாவட்டம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “சகோதரி வில்ஹெல்மினா உடல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், இதுதொடர்பாக பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

வெஸ்டர்ன் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தடயவியல் மானுடவியல் இயக்குநருமான நிக்கோலஸ் வி பாசலாக்வா “அடக்கம் செய்யப்பட்ட பிறகு உடல்கள் அரிதாகவே தோண்டி எடுக்கப்படுவதால் இது எப்படி சாத்தியம் என்று சொல்வது கடினம். அதேநேரத்தில், நன்கு பாதுகாக்கப்பட்ட மனித உடல்கள் இதுபோன்று இருந்துள்ளன. உதாரணத்துக்கு, எகிப்திய மம்மிகள், ஐரோப்பாவின் போக் உடல்கள் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.